ஏன் தமிழ் ?



ஏன் 'தமிழ்' சங்கத்தின் புதிய வலைத்தளம் 'தமிழில்' எழுதப்பட்டிருக்கிறது?

நமது புதிய தளத்திற்கு வந்தவுடன், இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு தோன்றியிருக்கும், அதற்கு பதலளிக்கும் விதமாக ஒரு சிறிய விளக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக உலகமயமாக்கலின் தாக்கத்தினாலும், நாள்தோரும் நம் மனதை ஆக்கிரமிக்கும் ‘டமிழீஷ்' தொலைகாட்சி நிகழ்ச்சிகளாலும், நமது அநியாய ஆங்கில மோகத்தாலும், தமிழ்ச் சொற்கள் பலவற்றையும் மறந்து, பொருள் புரிந்தோ புரியாமலோ, தப்புத் தப்பாக வலிய ஆங்கில வார்த்தைகளைப் புகுத்திப் பேசுவதையே பெருமை என்று நினைக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறோம்.

ஆனால் அதே நேரத்தில் இந்தத் தாக்கங்களுக்கு முன்னால் பிறந்து, தமிழ் மொழியையே பெரும்பாலும் பேசி வளர்ந்த கடைசி தலைமுறையினரான நாம், நம் அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், நம் தாய்மொழியின் அருமைகளை, பெருமையாக அறிமுகப் படுத்தி வைப்பது நம் கடமையாகிறது.

'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி' என்று காலங் காலமாக பல பேச்சாளர்கள் பேசிக் கேட்டும், பள்ளியில் படித்தும் வந்திருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பல மொழிகளின் தாக்கத்தையும் வென்று, இன்று கணினி உலகிலும் தாக்குப்பிடிக்கக் காரணம் நம் மொழியின் இலக்கண திறணும், வளமையும்தான் என்றால் அது மிகையாகாது.

நம் மொழியை நாமிருக்கும் வரையாவது அழியாமல் காக்க வேண்டும் என்று போராடும் நம் தலைமுறையினரின் ஒரு சிலரோடு சாண்டியேகோ 'தமிழ் சங்கமும்' சேர்ந்து போராடுவதின் தொடக்கமாக இந்த தளம் இருக்கும் என்ற நம்பிக்கையில்..

நம் வலைத்தளத்தை தமிழில் அமைத்திருக்கிறோம்.

நீங்களும் வரவேற்பீர்கள் என்று நம்புகிறோம்.

நிர்வாகக் குழு சாண்டியேகோ தமிழ்ச் சங்கம்


உங்கள் கருத்துக்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.